ஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் பல படங்களை தயாரித்தவர். தனது மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை ஹீரோவாக அறிமுகப்படுத்தி 2014-ல் ‘அல்லுடு சீனு’ படத்தைத் தயாரித்தார். தனது மகனை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் பெரிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை படத்தில் கொண்டு வந்தார். தன் மகனுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையை கேட்டார். அப்போது பிரபல நடிகை ஒருவர் நடிக்க மறுத்துவிட்டார்.
இதேபோல் வேறு சில முன்னணி நடிகைகளிடம் கேட்டபோதும் புதுமுக ஹீரோவுடன் நடிக்க முடியாது என்று கூறிவிட்டனர். சமந்தா தெலுங்கில் உச்சத்தில் இருந்த காலம் அது. கேட்டபோது கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை பிரபல இயக்குனர் வி.வி. விநாயக் இயக்கினார். ‘அல்லுடு சீனு’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தயாரிப்பாளராக லாபம் ஈட்டியதில் மகிழ்ச்சியில் இருந்த பெல்லம்கொண்டா சுரேஷ், சமந்தாவுக்கு பண்ணை வீடு ஒன்றை பரிசாக அளித்தார்.
‘எனது மகனுடன் பல பிரபல நடிகைகள் நடிக்க மறுத்த நிலையில், சமந்தா மட்டும் தனது மார்க்கெட்டையும், இமேஜையும் தூக்கி எறிந்துவிட்டு என் மகனுடன் நடித்தார். அதனால் முதலில் 25 லட்சம் ரூபாய் கொடுத்தேன். படம் எனக்கு லாபம் கொடுத்தபோது, நான் அவருக்கு பண்ணை வீட்டைக் கொடுத்தேன்’ என்று பெல்லம்கொண்டா சுரேஷ் சமீபத்தில் ஒரு எப்எம்முக்கு அளித்த பேட்டியில் கூறினார்.