பெங்களூரு: பெங்களூரு சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 3-வது தமிழ் புத்தக திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி கே.சிவன் நேற்று தொடங்கி வைத்தார். பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் வி.ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி. குமார் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலையில் புத்தக வெளியீட்டு விழா, கருத்தரங்கு, பட்டிமன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கன்னட எழுத்தாளர் எஸ்.ஜி.சித்தராமையா, பகுஜன் சமாஜ் கட்சியின் தென்னிந்திய முன்னாள் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், திமுக முன்னாள் எம்எல்ஏ கே.வி. நன்னன், எழுத்தாளர் என்.சொக்கன் உள்ளிட்டோர் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.
30-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில், இந்து தமிழ் திசை பதிப்பகம் மற்றும் தி இந்து குழுமத்தின் புத்தகங்கள் பண்டிதர் பதிப்பக அரங்கில் (எண். 13) விற்பனை செய்யப்படுகிறது. பாபாசாகேப் அம்பேத்கரின் பன்முகப் பார்வை, மகரும் தமிழ் கண்ணு, தெற்கிலிருந்து ஒரு சூரியன் உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் 10 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.
புத்தகத் திருவிழாவின் கடைசி நாளில், கர்நாடகாவில் தமிழர்களின் நலனுக்காக பாடுபட்ட 20 பேருக்கு சிறந்த ஆளுமை விருது வழங்கப்படுகிறது. கர்நாடக தமிழர்களின் உரிமைக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர் சி.ராசனுக்கு இந்த ஆண்டுக்கான கர்நாடக தமிழ் பெருந்தகை விருது வழங்கப்படவுள்ளது.