2022-ல் உக்ரைன் நேட்டோவில் சேர முடிவு செய்ததைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்தப் போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ உதவி செய்து வருகின்றன. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஒரு பேட்டியில், “நான் அதிபராக இருந்திருந்தால், ரஷ்யா – உக்ரைன் போர் நடந்திருக்காது” என்று கூறியிருந்தார்.
அவர் மீண்டும் அமெரிக்க அதிபரான பிறகு, ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உறுதிமொழியை அவர் ஏற்கனவே அளித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அளித்த பேட்டியில் கூறியதாவது:- அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சமரச பேச்சுவார்த்தைக்கு தயார்.
அரசியல் என்பது சமரசத்தின் கலை. பேச்சுவார்த்தைக்கும், சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று எப்போதும் கூறி வந்தோம். ஆனால் இந்த பேச்சுக்கள் கள நிலவரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். நேட்டோவில் இணையும் முயற்சியை உக்ரைன் கைவிட வேண்டும் என்றும், ரஷ்யாவால் இணைக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் நாங்கள் முன்பு நிபந்தனை விதித்துள்ளோம். உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை ரஷ்யாவின் இராணுவத்தையும் பொருளாதாரத்தையும் பலப்படுத்தியுள்ளது.
இந்த முடிவை நாம் முன்பே எடுத்திருக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் ரஷ்யா வலுவாக உள்ளது. ஏனென்றால் நாம் உண்மையிலேயே இறையாண்மை கொண்ட நாடு. நமது பொருளாதாரத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. உலகிலேயே வலிமையான ராணுவமாக இருக்கும் வகையில் நமது ராணுவத்தை பலப்படுத்தியுள்ளோம். உக்ரைன் மீதான போரில் நாங்கள் எங்கள் இலக்குகளை அடைந்துள்ளோம்.
மேற்கத்திய நாடுகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் நமது ஆர்சனிக் ஏவுகணைத் தாக்குதலை நிறுத்த முடியாது. இதை நீங்கள் சரிபார்க்கலாம். இராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் மாஸ்கோவில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டது பாதுகாப்புப் படையினரின் மிகப்பெரிய தவறு. இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தங்களது பாதுகாப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ரஷ்யாவின் குர்ஷ்க் பகுதிக்குள் நுழைந்த உக்ரைன் துருப்புக்களை கண்டிப்பாக விரட்டியடிப்போம். இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.