தமிழகத்திற்கான 180-வது மாநில அளவிலான வங்கிக் குழு (SLBC) கூட்டம் சென்னையில் அதன் ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசியதாவது:-
செப்டம்பர் 30 நிலவரப்படி, 127.28 சதவீத கடன் மற்றும் வைப்பு விகிதத்தை எட்டியதற்காக வங்கிகளுக்கு வாழ்த்துகள். மேலும், 2024-25 நிதியாண்டின் 2-வது காலாண்டில் வருடாந்திர கடன் திட்ட இலக்கில் 51.39 சதவீதத்தை எட்டியதற்கு வாழ்த்துகள். அரசின் திட்டங்கள் மற்றும் முன்னேற்றத்தால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில், கலைஞர் கைவினைத் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் போன்ற மாநில அரசின் புதுமையான திட்டங்கள் 2024-ல் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
வங்கிகள் வழங்கும் மொத்தக் கடனில் பெண்களுக்கான கடன் 20.09 சதவீதம் உள்ளது. சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை வங்கிகள் மேலும் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார். இக்கூட்டத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளரும், தமிழ்நாடு மாநில அளவிலான வங்கிகள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளருமான ரியாஸ் உல் ஹக், கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார்.
விவசாயம், MSMEகள், கல்விக்கடன்கள், வீட்டுக்கடன்கள், பெண்கள் கடன் வாங்குவோர், நலிவடைந்த பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினருக்கு கடன் வழங்குவது குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் தனராஜ்.டி, நிதிச் செயலர் டி.உதயசந்திரா, இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் உமாசங்கர், நபார்டு வங்கி முதன்மைப் பொது மேலாளர் ஆர்.ஆனந்த், அரசுச் செயலர்கள், தமிழகத்தின் பல்வேறு துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாடு அரசு, ரிசர்வ் வங்கி, நபார்டு மற்றும் வங்கிகளின் மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை மேலாளர்கள்.