சேலம்: நிவாரண உதவி வழங்கல்… மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று மாலை நிலக்கரி சுமைப்பான் (Coal Bunker) ஒன்று எதிர்பாராத விதமாகச் சரிந்து விழுந்ததால் அந்த இடத்தில் பணி செய்து கொண்டிருந்த ஏழு ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களில் காயமடைந்த ஐந்து பேர் உடனடியாக மீட்டு முதலுதவிக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர். இவ்விபத்தில் சிக்கிய வெங்கடேசன் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
முதலமைச்சர் உத்தரவுப்படி, சுற்றுலா அமைச்சர் அவர்களும், சேலம் மாவட்ட ஆட்சியரும் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், தமிழக முதலமைச்சர் ஆணைப்படி, விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஐந்து பேருக்கும் தலா 2 லட்ச ரூபாயும் நிவாரணமாக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். உடன் சேலம் மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி, மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம் ஆகியோர் இருந்தனர்.