அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள், பணிமனை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 1.50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில், 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர் நலச் சங்க பேரவை மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் ‘இந்து தமிழ் திசை’ நிருபரிடம் கூறியதாவது:- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 95 ஆயிரம் பேர் உள்ளனர். ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இது தொடர்பாக அரசு ஆணை (எண்.142) வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு உத்தரவை ரத்து செய்து 2022-ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதும், அந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதிகாரிகள் நலச் சங்கம் சார்பில் ரூ. 70 லட்சம் செலவு செய்து வழக்கு தொடர்ந்தோம்.
ஆனால், அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி அரசு தொடர்ந்து மேல்முறையீடு செய்து, எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. 2015-ம் ஆண்டு முதல் 15 ஆயிரம் ஓய்வூதியர்கள் பணப்பலன்கள் கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரசாங்கமே பொறுப்பு. எங்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 3,028 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. கூடுதலாக மாதந்தோறும் ரூ. 170 கோடி செலவிடப்படுகிறது.
எனவே, அகவிலைப்படியை அதிகரிக்க முடியாது என்று தொடர்ந்து கூறுவது ஏற்புடையதல்ல. மற்ற அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் சூழலில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்காதது அநியாயம். பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் கொண்டு வந்து, அதை ஈடுகட்ட போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பலன்களை நிறுத்துகின்றனர். இதேபோல், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு உரிய சலுகைகளை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.