சென்னை: சென்னையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம், பழவேற்காடு உள்ளிட்ட இடங்களில் வனத்துறை மூலம் ஆமைகள் அடைகாக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரங்களில் இருந்து சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் இங்கு பாதுகாக்கப்படும். 45 நாட்களுக்குப் பிறகு அவை இயற்கையாகவே குஞ்சு பொரிக்கின்றன.
பொதுவாக, ஆமை குஞ்சுகள் காலை அல்லது மாலையில் முட்டையிலிருந்து பொரிக்கும். பின்னர் அவை சேகரிக்கப்பட்டு கடலில் விடப்படுகின்றன. இந்த முட்டைகளை சேகரிக்கும் பணி இரவு சுமார் 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடக்கிறது. கடற்கரை மணலில் உள்ள குழியில் இடப்படும் முட்டைகள், 45 நாட்களுக்கு பிறகு இயற்கையாக பொரிந்து குஞ்சுகள் வெளிப்பட்டு கடலுக்குள் செல்கின்றன. அதன்படி, பழவேற்காடு கூனங்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் இதுவரை 1,100 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வனத்துறை மூலம் முதன்முறையாக ‘டர்டில் வாக்’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஆமை கூடுகளின் எண்ணிக்கை, முட்டை மற்றும் பிற முக்கிய தகவல்களைப் பெற வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள், 12 கோடி ஆண்டுகளாக பூமியில் வாழ்கின்றன.
ஆலிவ் ரிட்லி ஆமைகள் எங்கு பிறந்தாலும் முட்டையிடும். இந்தியாவில், தமிழகம் மற்றும் ஒடிசா கடற்கரைகளில் அதிகளவில் முட்டையிடுகின்றன. நமது கடற்கரைகளிலும் முட்டையிடுகிறார்கள். மீனவர்களின் நண்பனாகக் கருதப்படும் இவ்வகை ஆமைகள் அழிந்து விட்டால், நிச்சயம் மீனவர்களுக்கு பெரும் இழப்பாகும். தற்போது, ஆலிவ் ரிட்லி மொபைல் அப்ளிகேஷன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அடுத்து, இதற்கான இணைய அடிப்படையிலான டாஷ்போர்டுகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஆண்டு 2.21 லட்சம் முட்டைகளை பாதுகாத்து சாதனை படைத்தோம். தற்போது 8 மாவட்டங்களில் உள்ள 45 குஞ்சு பொரிப்பகங்கள் மூலம் முட்டைகளை பாதுகாத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.