மாஸ்கோ: சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் மாளிகையை சில வாரங்களுக்கு முன்பு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான சிரியா கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். அதற்கு முன், அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார்.
தற்போது அவர் தனது மனைவி அஸ்மா அல்-ஆசாத் மற்றும் குடும்பத்தினருடன் ரஷ்யாவில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் ரஷ்யாவை விட்டு லண்டன் செல்லவுள்ளதாக சவுதி மற்றும் துருக்கிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, தனது கணவர் பஷார் அல் ஆசாத்திடம் இருந்து விவாகரத்து கோரி லண்டனில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்காக மாஸ்கோவை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரியுள்ளார். அவரது விண்ணப்பத்தை ரஷ்ய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இங்கிலாந்து மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்ற அஸ்மா அல்-ஆஆசாத், லண்டனில் வசிக்கும் சிரிய தம்பதியருக்கு பிறந்தவர்.