அமெரிக்க பாடகி மேரி மில்பென் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் அனுப்பியுள்ளார். நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து, ஆப்ரிக்க-அமெரிக்க பாடகியும் நடிகையுமான மேரி மில்பென் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாடகி மேரி மில்பென் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்து அன்பின் மிகப்பெரிய பரிசு மற்றும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி. என் இரட்சகராகிய கிறிஸ்துவை கிறிஸ்துமஸுக்குக் கௌரவித்த பிரதமர் மோடிக்கு நன்றி.
கிறிஸ்துவைப் பற்றிய உங்கள் வார்த்தைகள் என் இதயத்தைத் தொட்டன. இந்தியாவில் உள்ள என் சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதையடுத்து பாடகி மேரி மில்பெனுக்கு எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார். “கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த நாம் அனைவரும் பாடுபடுவது அவசியம்” என்று அவர் கூறினார்.