புதுடில்லி: நாட்டின் கடந்த மற்றும் தற்போதைய விசயங்கள் தொடர்பாக ஏமாற்றும் வரலாறு காங்கிரஸக்கு உண்டு. இவர்களின் இந்த எண்ணம் நீட் விவகாரத்திலும் வெளியில் வந்துள்ளது என்று உயர்கல்வி துறை மந்திரி தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் பேப்பர் லீக் தொடர்பாக பீகார் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வில் பல மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றனர். 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. நீட் தேர்வில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் நடத்த வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர். இதனால் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்ப்பட்டது. கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.
தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குனர் அதிரடியாக மாற்றப்பட்டார். பேப்பர் லீக் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கப்பட்டன. இவைகளை வருகிற 7-ந்தேதி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் இது தொடர்பான ஒருநாள் முழுவதும் விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இன்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி “மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை அரசு விட்டு வைக்காது” எனக் கூறினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நீட் விவகாரத்தில் பொய்களை பரப்பி வருகிறது. ஏமாற்று கொள்கைகளை தவறாக வழிநடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய உயர்கல்வி துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது: நாட்டின் கடந்த மற்றும் தற்போதைய விசயங்கள் தொடர்பாக ஏமாற்றும் வரலாறு காங்கிரஸக்கு உண்டு. இவர்களின் இந்த எண்ணம் நீட் விவகாரத்திலும் வெளியில் வந்துள்ளது. பொய்கள் மற்றும் வதந்திகளின் உதவியுடன் பிரச்சினைகளில் இருந்து விலகி நிலையற்ற தன்மையை உருவாக்கும் இந்திய கூட்டணியின் நோக்கம் தேச விரோதமானது மற்றும் மாணவர் விரோதமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.