மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,701 கன அடியாக குறைந்தாலும், நீர்மட்டம் 119.41 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்தும், வெளியேற்றமும் ஒரே சீராக நீடித்தால், ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை இந்த ஆண்டு 3-வது முறையாக நிரம்ப வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறையும்.
ஒகேனக்கல் காவிரியில் 4-வது நாளாக வினாடிக்கு 3,500 கனஅடி நீர்வரத்து தொடர்கிறது. அதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 2,886 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2,701 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 119.32 அடியில் இருந்து 119.41 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.53 டிஎம்சி. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மற்றும் நீர் திறப்பு இதே அளவில் நீடித்தால், ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை 3-வது முறையாக இந்த ஆண்டு நிரம்ப வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.