சென்னை: சப்போட்டா பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்-சி, பொட்டாசியம், தாமிரம் ஆகிய சத்துக்கள் உள்ளன.
சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும். சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும்.
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.
சப்போட்டாவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிக அளவு நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. விளையாட்டு வீரர்கள் சப்போட்டா பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.
கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் அதிக அளவு கொண்ட சப்போட்டா பழம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்றவற்றை குறைப்பதில் உதவுகிறது.
நீரில் இந்த பழத்தினை கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த முடியும். மேலும் இது மூல வியாதி மற்றும் வயிற்றுக்கடுப்பினால் ஏற்படும் வலியை தடுக்க உதவுகிறது. சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத்தலாம்.