சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் வீடியோ காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசினார்.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் தான், ‘மக்களைத் தேடி மருத்துவம்’. இத்திட்டத்தை, 2021 ஆகஸ்ட் 5-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கிவைத்தார்.
தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பெண்களின் சுயமரியாதையை காக்கவும், அவர்களது உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெயலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ந்தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் வீடியோ காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசினார்.
மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசினார். முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசி கருத்துகளை கேட்டறிந்தார். பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்றவர்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினார்.
பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களை கேட்டறிந்த முதலமைச்சர், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியான நேரத்திற்கு வந்து சேர்கிறதா, எந்த தேதியில் பணம் வருகிறது, எவ்வளவு தொகை வருகிறது, எந்த வகையாக வந்தடைகிறது, ஏதேனும் குறை உள்ளதா, அலுவலகத்தில் அதிகாரிகள் நன்றாக நடத்துகொள்கிறார்களா? என்ற விவரங்களை கேட்டறிந்தார்.