திருச்சி: தி.மு.க. ஆதரவு அரசியலை விஜய் முன்னெடுத்தால் பா.ஜ.க.வின் அரசியல் தனித்துவமாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக சார்ந்த அரசியலை விஜய் கையிலெடுத்தாலும் பாஜகவுக்கு சந்தோஷம் தான். மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என நடிகர் விஜய் கூறுகிறார். திமுக சார்ந்த அரசியலை நடிகர் விஜய் முன்னெடுப்பது போல் உள்ளது.
2021க்கு முன்பு வரை மத்திய அரசு என்று தானே அனைவரும் கூறி வந்தனர். திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் பாஜகவின் அரசியல் தனித்துவமாக இருக்கும்.
விஜய் திமுக ஆதரவு அரசியலை முன்னெடுப்பது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும். தமிழகத்தில் உருது பள்ளிகளை அதிகம் கொண்டு வர வேண்டும் என்பது மாநிலக் கல்விக்கொள்கை. உருது பள்ளிகளை அதிகம் திறப்பது உருது திணிப்பு இல்லையா?
கடலோர பள்ளிகளில் மாணவர்களுக்கு மீனவர்கள் சார்ந்து பாடம் கற்பிப்பது குலக்கல்வி இல்லையா? தமிழக அரசு கற்பிப்பது குலக்கல்வி இல்லை, மத்திய அரசு கொண்டு வந்தால் குலக்கல்வியா? என்று கேள்வி எழுப்பினார்.