கோவை: கோவையில் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதை கண்டித்து ஒரு நாள் அடையாள கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை, மாநகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகள், நான்கு பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என, 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு மலுமிச்சம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவும், போராட்டங்கள் மூலம் உணர்த்தவும், அடுத்தடுத்த நடவடிக்கைகளை செயலாற்றிட குழு அமைத்திட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள், சமூக அமைப்பினர், தன்னார்வு அமைப்பினர், பெண்கள் குழுவினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இன்று மலுமிச்சம்பட்டியில் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்றும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு எடுக்கப்பட்டது. முடிவு எடுக்கப்பட்டதற்கு ஏற்ப, இன்று மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி பொதுமக்கள், மலுமிச்சம்பட்டி ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.