திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே போகி மேளம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் அருந்ததியர் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் மேளத்தை அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். அந்தக் காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் போகி மேளம் விளையாடி மகிழ்வார்கள்.
இந்த நடைமுறை இன்றும் பல கிராமங்களில் உள்ளது. இதற்காக திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் புரம் கிராமத்தில் பாரம்பரிய முறையில் போகி மேளம் செய்யும் பணியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அருந்ததியர் புரம் கிராமத்தில் பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் மேளத்தால் பாரம்பரியமாக செய்யப்படும் போகி மேளம் விற்பனை குறைந்துள்ளதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். பொங்கல் சீசனில் அரசு முன்பணமாகவோ அல்லது கடனாகவோ பணம் வழங்க ஏற்பாடு செய்தால் மேளம் தயாரிக்கும் தொழில் மேலும் மேம்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.