தாம்பரம் : தாம்பரம் 5 பேரூராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது மாநகராட்சி பகுதியில் 2,85,566 குடியிருப்புகள் மற்றும் 10,30,958 மக்கள் வசிக்கின்றனர். தற்போதுள்ள தாம்பரம் மாநகராட்சியில் 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 50,000 மக்கள்தொகைக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய நகர்ப்புற நல ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தாம்பரம் மாநகராட்சியில் குறைந்தபட்சம் 27,187 மற்றும் அதிகபட்சமாக 1,45,427 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், ஆரம்ப சுகாதார நிலைய சேவை பகுதி தொடர்ச்சியாக இல்லாததால், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவ சேவை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகளை களைய, தாம்பரம் மாநகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து, குடும்ப கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குடும்பக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, குடும்ப விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, மொபைல் போன் எண், குடும்ப அட்டை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு விவரங்கள், குடும்ப விவரங்கள், கல்வி, தொழில், சுகாதார மதிப்பீடு, என பல்வேறு விவரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குழந்தைகள் தடுப்பூசி விவரங்கள், மகப்பேறு (எம்) குடும்ப நல விவரங்கள், நோய் பாதிப்பு விவரங்கள், சமூக-பொருளாதார மதிப்பீடு, குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றல் விவரங்கள் மற்றும் செல்லப்பிராணி விவரங்கள் சேகரிக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடையாள எண் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, சேவைப் பகுதிகளை வரையறுத்தல், சுகாதாரச் சேவைகள் மக்களைச் சென்றடைவதில் உள்ள சிக்கல்களைக் கண்டறிதல் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதிக்கக்கூடிய பல்வேறு காரணிகள் ஆகியவற்றின் மூலம் பொது சுகாதார சேவைகளைத் திட்டமிடுவதற்கு இது உதவும்.
தமிழகத்தில் முதன்முறையாக தாம்பரம் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, இப்பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.