புதுடெல்லி: இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனாவின் விசாவை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது.
வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு ரகசியமாக வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
மர்மமான முறையில் ஏராளமானோர் காணாமல் போக காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12-ம் தேதிக்குள் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 11 பேரை கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்தது.
ஆனால், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தவேண்டும் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனாவின் விசாவை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது.