இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள பெகர்வின் ஜட்டன் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லலித் திமான். சமீபத்தில் டிசம்பர் 2024-க்கான ரூ.210 கோடி 42 லட்சத்து 8,405 மின் கட்டணத்திற்கான ரசீது அவருக்கு வந்தது. முந்தைய மாத மின் கட்டணத்திற்கு ரூ.2,500 மட்டுமே செலுத்தியிருந்தார். இந்த நிலையில், டிசம்பர் மாதத்திற்கான பில்லைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதைத் தொடர்ந்து, திமான் மின்சார வாரிய அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தார். அப்போது, தொழில்நுட்பக் கோளாறால் அதிக மின் கட்டணம் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், மின் கட்டணம் ரூ.4,047 ஆகக் குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் குஜராத்தின் வல்சாத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அங்கு, அன்சாரி என்ற தையல்காரருக்கு ரூ.86.41 லட்சம் மின் கட்டணம் வந்தது.
அவரது கடைக்கு அரசுக்குச் சொந்தமான ‘தக் ஷின் குஜராத் விஜ் கம்பெனி’ மின்சாரம் வழங்குகிறது. தெற்கு குஜராத்தின் 7 மாவட்டங்களில் இந்த நிறுவனத்திற்கு 32 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் உள்ளனர். அன்சாரி இந்த மிகப்பெரிய தொகையை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, மின்சார அளவீட்டை எடுத்த நபர் தவறுதலாக 2 கூடுதல் இலக்கங்களை, 1,0 ஐச் சேர்த்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மின் கட்டணம் ரூ. 1,540 ஆக திருத்தப்பட்டது.