சென்னை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிடக் கோரி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார். ஆளுநர் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கஞ்சா மற்றும் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்துள்ளேன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு காவல் துறை அதிக கவனம் செலுத்தவில்லை. 4 மணி நேரத்திற்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக ஆளுநர் கூறினார். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அனுதாபி என்று முதலமைச்சரே ஒப்புக்கொண்டால், அவர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? ஞானசேகரனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
திமுக அரசால் பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 கூட சேர்த்து குடுக்க முடியவில்லை. ‘தேர்தல் வரும்போது பார்ப்போம்’ என்று அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் தனது வார்த்தைகளை மழுப்பாமல் கூறுகிறார். அடுத்த ஆண்டு தேர்தல் வரும்போது ரூ. 1,000 கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்ற மனக் கோட்டையை திமுக கட்டமைத்து வருகிறது.
அவர்களின் நோக்கம் பலிக்காது. மக்கள் தெளிவாக உள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடைத்தேர்தல்களையும் சந்தித்த ஒரே கட்சி திமுக மட்டுமே. ஆனால் தற்போது, இடைத்தேர்தல்கள் ஜனநாயக முறையில் நடத்தப்படவில்லை. திமுக ஆட்சியில் நடப்பவை அராஜக இடைத்தேர்தல்களாக இருக்கும். எனவே, இது குறித்த திமுகவின் நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.