புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கலந்து கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. டிரம்ப்-வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், வரவிருக்கும் நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார்” என்று கூறப்பட்டது.
விழாவில் கலந்து கொள்ளும் மற்ற வெளிநாட்டு பிரமுகர்களுடனும் ஜெய்சங்கர் கலந்துரையாடுவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்வது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியோ மலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலி மற்றும் எல் சால்வடார் அதிபர் நயீப் புகேலே ஆகியோரும் அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவித்தன. சீன அதிபர் ஜி ஜின்பிங், அவருக்குப் பதிலாக பதவியேற்பு விழாவிற்கு ஒரு உயர்மட்ட தூதரை அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ போன்ற டிரம்பின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகக்கூடிய வேறு சில தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு, பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்படுவாரா என்பது குறித்து சமூக ஊடகங்களில் ஊகங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும், டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடி நேரடியாக அழைக்கப்பட்டாரா அல்லது அவருக்குப் பதிலாக ஜெய்சங்கர் கலந்து கொள்வாரா என்பது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.