தஞ்சாவூர்: தஞ்சையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா என மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சை வடக்கு வீதி முதல் கரந்தையில் உள்ள மார்க்கெட் வரை 50-க்கும் மேற்பட்ட கடைகளில் மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் தலைமையில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரை மேற்பார்வையாளர்கள் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.