சென்னை: சிந்து சமவெளி, கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாராய்ச்சி பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளை வைத்து பார்க்கும் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பழமையான தமிழரின் பண்பாடு என ஆராய்ச்சிகளில் தெரிகிறது.
இதற்கான சான்றுகள் தற்போது ஆதாரமாக தலைநிமிர்ந்து நிற்கின்றன. தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றின் தென்கரையில் புலிமான் கோம்பை என்ற இடத்தில் காளையுடன் மோதும் இளைஞர் ஒருவரின் சிற்பத்தில் “ஆகோள் ஆநிரை மீட்டப்பட்டான் கல்” என தமிழ் எழுத்துகளுடன் நடுகல் ஒன்று அகழ்வாராய்ச்சியின் போது கண்டறியப்பட்டது. மறைந்த வீரரின் நினைவாக இந்த நடுகல் அமைக்கப்பட்டிருக்கும் என்று பல அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். ஜல்லிக்கட்டு எத்தகைய பழமை வாய்ந்தது என்று இந்த நடுகல் நிரூபிக்கிறது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு ஆயர்கள் (முல்லை நில மக்கள் ) அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகின்றது. முல்லை நிலத்தில் வாழ்ந்த செல்வப் பெருங்குடி மக்கள் தங்கள் மந்தையில் காளைக் கன்று ஒன்றைத் தனியே வளர்ப்பார்கள். இதற்குத் தனியாக போர்ப் பயிற்சி கொடுத்து ஏறுதழுவலுக்குப் பயன்படுத்துவார்கள். தங்கள் வீட்டு மகள் பருவம் அடைந்தவுடன், காளையை அடக்கி வெற்றி பெரும் வீரருக்கு மணம் முடித்து வைப்பார்கள். இதைத்தான் ‘கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகிறவனை மறுமையிலும் ஆயமகள் தழுவமாட்டாள் என்று சங்க இலக்கியம் கலித்தொகை கூறுகின்றது.
ஆங்கிலேயர் காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடங்கல் வந்தபோது மக்களின் கோரிக்கைகளால் ஆங்கிலேயர்கள் அனுமதி அளித்துள்ளதாக முன்னோர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் மதுரைதான் மிகவும் புகழ்பெற்றது. தை மாதம் முதல் நாள் அவனியாபுரம், தை இரண்டாம் நாள் பாலமேடு. தை மூன்றாம் நாள் அலங்காநல்லூர் என ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் வீரத்தை தற்போதும் பறைசாற்றி வருகின்றன. சங்க காலம் முதல் இக்காலம் வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் வீரத்தை காட்டுகின்றன.
ஜல்லிக்கட்டு விளையாட்டை மூன்று வகைகளாக பிரிக்கலாம். ஒன்று வாடி மஞ்சு விரட்டு. இது, வாடிவாசல் திறப்பின் வழியாக வெளியே வரும் காளைகளை பிடித்துக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும். அதன் பிடியை விடக் கூடாது. மதுரையில் உள்ள பாலமேட்டில் இந்த மாதிரியான ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் பிரபலம். இன்னொரு வகை இராமநாதபுரம், சிவகங்கையில் பிரபலமான காளை விளையாட்டு ‘வெளிவிரட்டாகும்.
இதில் காளை திறந்த மைதானத்துக்குள் அனுப்பப்படும். காளை கயிறால் கட்டப்படுவதோ. குறிப்பிட்ட பாதையில்தான் செல்ல வேண்டுமென்றோ எந்த நிபந்தனையும் இருக்காது. வட்டம் மஞ்சுவிரட்டு என்பது மூன்றாவது வகை. காளையை அடக்கும் போட்டியாகும்.
இதில் வட்டம் என்ற சொல் கயிறைக் குறிக்கும். 15 மீட்டர் நீளமுள்ள கயிறால் காளை கட்டப்பட்டிருக்கும். 30 நிமிடத்துக்குள் ஏழு அல்லது ஒன்பது பேர் காளையை அடக்க முயல்வர். இவ்விளையாட்டில் பார்வையாளர்களுக்கு எந்த ஆபத்தும் நேர்வதில்லை.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து 2011 ஜூலை மாதம் ஜல்லிக்கட்டு காளைகளை ‘விலங்குகள் காட்சிப்படுத்துதல்’ பட்டியலில் இணைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. 2014ம் ஆண்டு மே 7-ந் தேதி, காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், காட்சிபடுத்துதல் பட்டியலில் காளைகள் இருப்பதால் அனுமதிக்க முடியாது என்றும் விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் நிரந்தர தடை விதித்து தீர்ப்பளித்தது. இது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதன் காரணமாக கடந்த 2015 மட்டும் 2016ம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. தொடர்ந்து தமிழக மக்கள் வலியுறுத்தியும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால்தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க முடியும் என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது. அப்பொழுதுதான் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகத்தில் வெடித்தது.
இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக கூடினர். இந்தியாவின் மிகப்பெரிய போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லும் என்று அறிவித்தது. அதே போல் கர்நாடகாவில் எருமை மாடுகளை கொண்டு நடைபெறும் கம்பளா போட்டிக்கும் இது பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
அதன்பிறகு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.