சென்னை: காணும் பொங்கல் திருநாளான, 49-வது சுற்றுலா கண்காட்சியை, ஒரே நாளில், 36,279 பேர் பார்வையிட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 49-வது சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி தொடங்கியுள்ளது.
இக்கண்காட்சியில், தமிழக அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 41 அரங்குகளும், மத்திய அரசு நிறுவனங்களால் 2 அரங்குகளும் என மொத்தம் 43 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஒரு பொழுதுபோக்கு வளாகம் 80,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. மாபெரும் சாகச விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் ஆகியவை மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் ரயில், பனி உலகம், கடற்கன்னி, மீன் அருங்காட்சியகம், பேய் வீடு, பறவைக் காட்சி, 3டி தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து சுற்றுலா பொருட்காட்சிக்கு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கண்காட்சி நாளில், 29,573 பெரியவர்கள், 6,706 குழந்தைகள் என மொத்தம் 36,279 பேர் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கண்காட்சி தொடங்கிய 6 நாட்களில், 74,930 பெரியவர்கள், 15,882 குழந்தைகள் என மொத்தம் 90,812 பேர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.