சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் 86-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாழப்பாடி ராமமூர்த்தி, தன் வாழ்நாளில், தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவிலும் மதவாத சக்திகள் காலூன்ற அனுமதிக்கக் கூடாது என, போராடியவர். அவரது குரல் ஏழை மக்களின் குரலாக, ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக இருந்தது. எனது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் வருகிறது. நான் பலமுறை அங்கு சென்றிருக்கிறேன். விமான நிலைய திட்டத்தை எந்தவித பாதிப்பும், அச்சமும் இன்றி செயல்படுத்தலாம் என அங்குள்ள மக்களிடம் கூறியுள்ளேன்.
இதே கோரிக்கையை முதலமைச்சரிடமும் வைத்துள்ளேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தி வருகிறோம் என்று மக்களவையில் பாஜக அமைச்சர் கூறிய பிறகும், திட்டம் அப்படியே உள்ளது. மோசமான நிதி நிலைமை காரணமாக பொங்கல் தொகுப்பில் பணம் வழங்கப்படவில்லை. இனி வரும் காலங்களில் பொங்கல் தொகுப்பில் பணம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்.
விஜய் தனது கட்சி மாநாட்டில் பேசும்போது, ”எங்களால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் இந்த இந்துத்துவ சக்தி அகற்றப்பட வேண்டும்” என்று கூறினார். அப்படியானால், அவர் இந்தியா கூட்டணிக்கு வருவது நல்லது, அவரது கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளும் அனைவருக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர், விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.