சென்னை: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பல லட்சம் பேர் ரயில், பேருந்து, கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப ஆரம்பித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் நாளை திங்கட்கிழமை காலை திரும்ப திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்த ரயில்கள் காட்டாங்கொளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.00, 4.30, 5.00, 5.45, 6.20 மணிக்கு புறப்படும். பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். இதேபோல், தாம்பரத்தில் இருந்து காட்டாங்கொளத்தூருக்கு காலை 5.05 மற்றும் 5.40 மணிக்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை, கேளம்பாக்கம் நோக்கி பேருந்தில் வரும் மக்கள், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி உள்ளிட்ட நிறுத்தங்களில் இறங்கினால், சிறப்பு பயணிகள் ரயில்கள் மூலம் எளிதாக ஊருக்குச் செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். பயண நேரம் சற்று குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.