திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், திருப்பதி லட்டு கவுன்டரில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தது குறித்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி, தேவஸ்தானத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் இன்று திருமலைக்கு வந்து 2 நாட்கள் தங்கி கோயில் அதிகாரிகளை சந்தித்து சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கன்னாவரத்தில் புதிய என்டிஆர்எப் வளாகத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்து வைத்தார். நேற்று இரவு விமான நிலையம் வந்த அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் லோகேஷ் ஆகியோர் வரவேற்றனர். இதனிடையே நேற்று அமித்ஷாவை முதல்வர் குழுவினர் சந்தித்தனர். அப்போது, ஏழுமலையான் கோயில் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது குறித்து அமித்ஷாவிடம் சந்திரபாபு புகார் அளித்தார்.
இதையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் உள்துறை கூடுதல் செயலரின் வருகை ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கோயிலுக்குத் தெரிவித்தது. சந்திரபாபு கொடுத்த அழுத்தமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். குற்றச்சாட்டு இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் நிர்வாகியும், திருப்பதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாகர ரெட்டி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதியில் நடந்த கூட்டம் மற்றும் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உள்துறை செயலர் விஜயவாடா வர இருந்தபோது, முதல்வர் நேற்று விஜயவாடா வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலில் சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வர் பவன் கல்யாணும் விழுந்தனர். உள்துறை செயலாளர் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினால், மாநில அரசு அவமானப்படும். எனவே இந்த விஜயத்தை ரத்து செய்யுமாறு கூறி சரணடைந்துள்ளனர். இதையடுத்து உள்துறை அமைச்சகம் உடனடியாக விசாரணையை ரத்து செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் என்ன நடந்தது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்றார்.