சென்னை: அண்டை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரிண்டிங் பணிகளில் 30 சதவீதம் ஆந்திராவில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சகத் தொழில் உள்ள நிலையில், அங்குள்ள அச்சகங்களை புறக்கணித்து, அண்டை மாநிலத்துக்கு பணி வழங்குவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழக அரசின் இந்த முடிவால், ஆண்டுக்கு குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் நடக்கும் இந்த பிரிண்டிங் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அச்சக உரிமையாளர்கள், அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நிலைகுலைந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து புத்தகங்களையும் அச்சடிக்கும் வகையில் தமிழகத்தில் அச்சகங்கள் இருந்தும், அண்டை மாநிலங்களுக்கு அச்சடிப்பது ஏன் என அச்சக உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே ஆந்திராவில் உள்ள அச்சகங்களுக்கு பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அச்சுத் தொழிலை மட்டுமே நம்பி வாழும் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் முழுப் பணியையும் தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.