ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம் போன்ற பகுதிகளில் விவசாயிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி விவசாயிகள், 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். ஏக்கருக்கு ₹25 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். இதை அறுவடை செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நேற்று காலை திடீரென பெய்த கனமழையால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. அதுமட்டுமின்றி இந்த நெல் பயிர்கள் 2 நாட்களுக்கு மேல் நீரில் மூழ்கினால் பயிர்கள் முற்றிலும் அழுகிவிடும்.
இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு சேதத்தை மதிப்பீடு செய்து அரசு சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் பென்ஜால் புயல் காரணமாக பொன்னேரி பகுதியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இதில் இருந்து மீண்டு விவசாயிகள் தற்போது விளை நிலங்களில் நெற்பயிர்களை பயிரிடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் திடீரென 7 செ.மீ கனமழை பெய்தது. பருவமழை பொய்த்ததால் அரசூர், சிற்றரசூர், ஆவூர், பனப்பாக்கம், பெரிய கரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நீரில் மூழ்கிய பயிர்கள் அடுத்த 2 நாட்களில் அழுகிவிடும். ஏக்கருக்கு ரூ. 30,000 ரூபாய் சாகுபடி செய்த நிலையில், பருவமழை பொய்த்ததால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மதிப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்குவதுடன், பயிர் காப்பீடு வழங்க வேளாண் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.