விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அளித்த பேட்டி:- தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக உள்ளதாக, பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் சொன்னது வேடிக்கையானது. பொருளாதார அடிப்படையே தெரியாத ஒருவரால்தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க முடியும். எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை நிதிக் குழு தீர்மானிக்கிறது.
தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது. 2021-ல் 1 லட்சத்து 2000 கோடியாக இருந்தது, தற்போது ரூ. 4 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில், நிதி ஆயோக் கடன் பெறுவதற்கு 28.7 சதவீத வரம்பை நிர்ணயித்திருந்தது, ஆனால் 27.01 சதவீதம் மட்டுமே கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதியாண்டும் நிதி ஆயோக் நிர்ணயித்த தொகையை விட குறைவாகவே கடன் வாங்கியுள்ளோம். நிதி நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையில் நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
தமிழக அரசுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டில் மத்திய அரசு வழங்க வேண்டும். வளர்ந்த மாநிலமான தமிழகத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழக அரசு இதற்காக ரூ. 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் பிரதமர் வீடு திட்டத்துக்கு தமிழக அரசே கூடுதல் நிதியும் ஒதுக்கி வருகிறது. தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்கு தனது சொந்த நிதியை பயன்படுத்தி வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காததால் கடன் சுமை அதிகரித்து வருகிறது. அதிமுக திட்டத்தை திமுக தடுக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் இன்னும் அமலில் உள்ளது, என்றார்.