விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை (ஜூலை 8) மாலையுடன் நிறைவடைகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ புஜேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
இதையடுத்து, இந்த தொகுதி காலியாக உள்ளதாக, தேர்தல் கமிஷனுக்கு, சட்டப் பேரவை செயலகம் தகவல் அனுப்பியது. இதையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. இந்த மனுக்கள் கடந்த 24ம் தேதி பரிசீலனைக்கு வந்தது. தாக்கல் செய்யப்பட்ட 64 வேட்பு மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்டது.இதில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஜூலை 8) மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. 8ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், வாக்காளர் அல்லாதவர்கள் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. அவர்களை தொகுதியை காலி செய்யுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவுறுத்தியுள்ளார்.