சென்னை: நந்தி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள சில தகவல்கள். நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
ஆந்திர மாநிலம் லபோட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம். தமிழ்நாடு மக்களுக்கு நந்தி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
மதுரை ஆவணி மூல வீதியில் “மாக்காளை” எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.