சென்னை: பரந்தூர் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்குழுவினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். திறந்தவெளியில் பிரசார வாகனத்தில் நின்றபடி பேசிய விஜய்,
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வரக் கூடாது என நான் சொல்லவில்லை. பரந்தூரில் அமைக்கக் கூடாது என்றுதான் நான் வலியுறுத்துகிறேன். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது எட்டுவழிச்சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அந்த நிலைப்பாட்டைதானே இங்கும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு , ஆளும் கட்சியானால் எதிர்ப்பா?
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதை நான் வரவேற்கிறேன். அதைத்தானே பரந்தூர் பிரச்சனையிலும் செய்திருக்க வேண்டும். இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று பேசினார். விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பரந்தூர் மக்களை பாதிக்காமல் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை எவரும் கை செய்யப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விஜய் பேச இருப்பதாக கூறப்படுகிறது.