மதுரை: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ததற்கு, மக்களின் கடும் போராட்டமே முக்கிய காரணம் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதுரை எம்பி சு. வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை:- இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நவ., 19-ல் அறிக்கை வெளியிட்டேன். டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரி, நவ., 21-ல், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதி, டிச., 3-ல், பார்லிமென்டில் பேசினேன்.
அனைத்து அமைப்புகள், விவசாய தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போராட்டத்தில் எந்த பாகுபாடும் இன்றி கலந்து கொண்டவர்கள். தமிழ்நாடு உணவு வணிகர் சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்பிரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:-
விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், வேளாண் மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ரத்னவேலு ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்ட அறிக்கை:-
மத்திய அரசின் டங்ஸ்டன் ரத்து திட்ட அறிவிப்பு மக்கள் போராட்டத்தின் முதல் படியாக இருக்கலாம், ஆனால் அனைத்து கிராமங்களிலும் டங்ஸ்டன் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்ட முழு விவரம் சேர்க்கப்படவில்லை. டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:- டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே சமயம், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் வளாகத்தை விட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம். இப்போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து மக்களுக்கும், மக்கள் இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.