மகா கும்பமேளா நகர்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. உத்தரபிரதேச அரசு நேற்று கூறியதாவது:- உலகின் மிகப்பெரிய மத விழாவான, மகா கும்பமேளா, பிரயாக்ராஜில், ஜனவரி, 13-ல் துவங்கியது.
பிப்ரவரி, 26-ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில், 45 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என, ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புராணங்களில் கூறப்பட்டுள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமமாக கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி 10 கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ளது.
கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புனித நீராடுவதற்கும், ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என உ.பி அரசு தெரிவித்துள்ளது.