கொடைக்கானல்: கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள கிராமமான கே.சி.யில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு ஒற்றை கட்ட மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளிலும் டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் உள்ள வீடுகளில் குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தினாலும், மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தப் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்ற விவசாயிக்கு 8,976 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தியதற்கு 1 லட்சத்து, 333 ரூபாய் மின்கட்டணம் வழங்குமாறு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அறிவிப்பின்படி மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்வாரியம் எச்சரித்துள்ளதால் கவலையடைந்துள்ளார்.
இதுகுறித்து கே.சி. பட்டி கிராம மக்கள் கூறியதாவது:- கடந்த சில மாதங்களாக வீடுகளுக்கு மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வருகிறது. இந்த குளறுபடிக்கு புதிய டிஜிட்டல் மின் மீட்டர் காரணமா? அது தெரியவில்லை. மின்கட்டணம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், மின்வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது விவசாயி இளையராஜா மின்கட்டணமாக ரூ. 1 லட்சம் வந்துள்ளது.
இவரைப் போலவே பலருக்கும் ரூ. 7 ஆயிரம் மற்றும் ரூ. 8 ஆயிரம் மின் கட்டணம் செலுத்த நோட்டீஸ் வந்துள்ளது. கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மிரட்டி வருகின்றனர். இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றனர்.