மாஸ்கோ: “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அழைப்பிற்காக காத்திருப்பதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர புடினை விரைவில் சந்திக்க விரும்புவதாக டிரம்ப் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். அணு ஆயுதங்களைக் குறைக்கும் நோக்கில் செயல்பட விரும்புவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, உக்ரைனில் நடத்தப்படும் ‘அபத்தமான போரை’ முடிவுக்கு கொண்டு வர வேண்டும் அல்லது அதிக வரி மற்றும் கூடுதல் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவை எச்சரித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். புடினும் டிரம்பும் போன் மூலம் பேச முடியுமா என்று நிருபர் கேட்டதற்கு, “ஆழமான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு நேருக்கு நேர் சந்திக்கும் முன் தொலைபேசி உரையாடல் மிகவும் முக்கியமானது.
டிரம்புடன் தொலைபேசியில் பேச புடின் தயாராக உள்ளார். நாங்கள் சிக்னல்களுக்காக (வாஷிங்டனில் இருந்து) காத்திருக்கிறோம்.” வியாழன் அன்று டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் பேசிய டிரம்ப், “நாங்கள் அணு ஆயுதக் குறைப்பைப் பார்க்க விரும்புகிறோம். அணு ஆயுதக் குறைப்பு யோசனையை ஜனாதிபதி புடின் மிகவும் விரும்பினார் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். மீதமுள்ளவற்றை நாங்கள் பெற்றிருப்போம்.
உலகமே இதைப் பின்பற்றும். இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “அணு ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க விரும்புவதாக புடின் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட பிற நாடுகளின் அணு ஆயுதக் களஞ்சியங்களைக் குறைப்பது உட்பட, பேச்சுவார்த்தைகள் விரிவானதாக இருக்க வேண்டும். எனவே, பேசுவதற்கு ஏதாவது இருக்கிறது, அதைப் பற்றி நாம் பேச வேண்டும். பல விஷயங்களில் காலம் கடந்துவிட்டது. இதில் நாங்கள் ஏற்கனவே ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.
எனவே, இந்த விவகாரத்தில் அமெரிக்காதான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார். அமெரிக்காவும் ரஷ்யாவும் பயன்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையையும், அவற்றை வழங்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் குண்டுவீச்சுகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் பிப்ரவரி 5, 2026 அன்று காலாவதியாகிறது.
எனவே, இந்த பேச்சுவார்த்தைகள் உலகின் இரண்டு பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையே அணு ஆயுத கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கான கடைசி வாய்ப்பு. இதற்கிடையில், “சவுதி அரேபியா மற்றும் பிற OPEC நாடுகளுக்கு எண்ணெய் விலையை குறைக்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். விலையைக் குறைப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. இதுவும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் விலை குறைந்தால் ரஷ்யா – உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.