கண்கவர் தோற்றம் கொண்ட பழங்களில் ஒன்றாக பலாப்பழம் உள்ளது. இதன் வெளித்தோற்றம் முட்களை போல கொண்டு கரடு முரடாக காட்சியளித்தாலும் உள்ளே இருக்கும் பலா சுளை மிகவும் இனிப்பான சுவை கொண்டதாக இருக்கும். மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இந்த சுவை மிகுந்த பழம் ஏராளமான வைட்டமின்ஸ், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ப்ரோட்டீனின் சிறந்த மூலமாக இருக்கிறது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் வீகன் (vegan) எனப்படும் முழு சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
எனவே இறைச்சி மற்றும் பிற விலங்கு அடிப்படையிலான உணவு பொருட்களுக்கு பதிலாக தாவர அடிப்படையிலான உணவு மாற்றுகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. தாவர அடிப்படையிலான இறைச்சி மாற்றுகள் என்பவை இறைச்சியைப் போன்ற சுவை, அமைப்பு அல்லது தோற்றம் கொண்டதாக இருக்கலாம் ஆனால் உண்மை இறைச்சியாக இருக்காது. நேரடியான இறைச்சியை விட தாவர அடிப்படையிலான இறைச்சி மாற்றுகள் நம்முடையஇதயத்திற்கு ஆரோக்கியமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த சூழலில் பலாப்பழம் இறைச்சிக்கு மாற்றாக மிகவும் பிரபலமானதாக மாறி இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை ஒத்திருக்கும் இந்த பழத்தின் அமைப்பு காரணமாக உணவு வகைகளில் இறைச்சிக்கு மாற்றாக பலாப்பழம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் பலாப்பழத்தின் அமைப்பு துண்டாக்கப்பட்ட இறைச்சியை ஒத்திருக்கிறது. ஆனால் உண்மையில் பலாப்பழங்கள் இறைச்சிக்கு சிறந்த மாற்றா..? பலாப்பழம் ஒரு பெரிய அளவிலான வெப்பமண்டல பழமாகும்.
முன்பே குறிப்பிட்டது போல இதன் வெளிப்புற தோல் தான் பார்ப்பதற்கு மிகவும் கரடு முரடாக இருக்குமே தவிர இதனுள் இருக்கும் அதிக அளவிலான சதை பகுதியான பலாசுளை மிகவும் இனிமையான சுவையுடையதாக இருக்கும். அதே போல பலாப்பழம் நம்முடைய இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது. எனினும் தற்போது உலகெங்கிலும் பெரும்பாலான துணை கண்டங்கள், தென் அமெரிக்கா, கரீபியன் மற்றும் அமெரிக்காவில் பரவலாக இந்த பழம் மக்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளது.
பலாப்பழத்தில் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அதிகம் உள்ளது. மற்றும் இதன் நியூட்ரல் ஃப்ளேவர் அனைத்து வகையான சீசனிங்ஸ்களுடன் சேர்த்து எடுத்து கொள்ள சிறப்பானதாகவும் இருக்கிறது. அசைவம் அல்லது இறைச்சி உணவுகளை தவிர்த்து விட்டு தாவர அடிப்படையிலான உணவுகளை மட்டுமே தங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள முக்கியத்துவம் கொடுக்கும் பல நாடுகளை சேர்ந்த மக்கள் மத்தியில் பலாப்பழம் மிகவும் பிரபலமாகி வருகிறது.