பலருக்கு கத்தரிக்காய் விருப்பமான காயாக இருக்கும். இது தரும் சுவையையும் ஆரோக்கியத்தையும் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இருப்பினும் சில பிரச்சனை இருப்பவர்களுக்கு இது எதிர்வினையான பாதிப்புகளை தரக்கூடும்.
அந்த வகையில் எந்தெந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது என்பதை பார்க்கலாம். பலவீனமான செரிமான அமைப்பு : செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளது அல்லது செரிமானம் மெதுவாக நடக்கும், எது சாப்பிட்டாலும் எதுக்களித்து மந்தம் தட்டும் எனில் நீங்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கத்தரிக்காய் வாயுவை உருவாக்கும் என்பதால் உங்கள் செரிமானத்தை இன்னும் மோசமாக மாற்றும்.
ஒவ்வாமை பிரச்சனை : உங்களுக்கு சரும எரிச்சல், அரிப்பு இருப்பின் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே உங்களுக்கு சரும அலர்ஜி எதுவாக இருந்தாலும் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாது என மருத்துவர்களே எச்சரிப்பார்கள். இது உங்கள் பிரச்சனையின் தீவிரத்தை கூடுதலாக அதிகரித்துவிடும் என்பதால் கவனமாக இருங்கள்.
நீங்கள் மன அழுத்தம் அல்லது மனப்பதட்டம் காரணமாக டிப்ரஷன் மாத்திரைகள் உட்கொள்கிறீர்கள் எனில் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. மீறினால் உங்கள் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். அதோடு அந்த மாத்திரையின் ஆற்றலை நீர்த்துப்போகச் செய்யும். உங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லை. குறைவான இரத்தமே உள்ளது எனில் இரத்த சோகை ஏற்படும். இரத்த சோகையால் பெண்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் நீங்கள் கத்தரிக்காய் அதிகமாக உட்கொள்கிறீர்கள் எனில் இரத்த உற்பத்தியை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இரத்த சோகை உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு கண்களை சுற்றி அரிப்பு, எரிச்சல், பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பின் கத்தரிக்காய் சாப்பிட வேண்டாம்.