இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தனது 43-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த வீடியோவை அவரது மனைவி சாக்ஷி தோனி, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். இந்த சூழலில் இன்று (ஜூலை 7) தனது 43-வது வயதை அவர் எட்டியுள்ளார். அவருக்கு ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளன.
2004 முதல் 2019 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் தோனி விளையாடி இருந்தார். 90 டெஸ்ட், 350 ஒருநாள் போட்டிகள், 98 டி20 போட்டிகளில் விளையாடி 17,266 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி தொடர்களில் அவரது தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்றுள்ளது.
சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் ஃபினிஷர். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கேப்டன். இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.