சென்னை: யு.ஜி.சி., வரைவு விதிகளை திரும்ப பெற கோரி தி.மு.க., எம்.பி.,க்கள் பிப். 6ம் தேதி டில்லியில் போராட்டம் நடத்த உள்ளனர். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டத்தில் தி.மு.க.,வின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட், பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களில் முக்கியமானவை, கவர்னருக்கான நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும், மாநில அரசின் கோப்புகள் மற்றும் மசோதாக்களில் கையெழுத்திடுவதற்கான கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பவை அடங்குகின்றன.
மேலும், கூட்டத்தில் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செயல்பட்டு டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதல்வருக்கும், துணை நின்ற மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில், மாணவர் அணி சார்பில் பிப்.6ல் டில்லியில் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த போராட்டம், பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற கோரி நடத்தப்பட உள்ளது.
மேலும், வக்ப் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றதற்கு மத்திய அரசை கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும் எடுக்கப்பட்டது.