வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் ஆதரவாளர்களின் மாணவர் விசாவை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 ஆயிரம் பேரை அடைத்து வைப்பதற்காக, முகாம் திறக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப் அமெரிக்கா அதிபராக பதவியேற்ற முதல் நாளிலிருந்து பல அதிரடி உத்தரவு மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். தற்போது, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அவர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கல்லூரி வளாகங்களில் ஹமாஸ் ஆதரவாளர்கள் என கருதப்படும் நபர்களின் மாணவர் விசா ரத்து செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வரும்.
அமெரிக்க யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல்கள், காழ்ப்புணர்ச்சி, தீ வைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று டிரம்ப் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, “ஹமாஸ் படையினருக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்து கொண்ட அனைத்து வெளிநாட்டினரையும் கண்டறிந்து, நாங்கள் உங்களை கண்டுபிடிப்போம், நாங்கள் உங்களை நாடு கடத்துவோம்.”
இதற்கிடையே, சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர்களைக் கடத்தும் நடவடிக்கைகள், குறிப்பாக ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி, தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 ஆயிரம் பேரை அடைத்து வைப்பதற்காக ஒரு முகாம் திறக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.