புதுடெல்லி: ‘ஹத்ராஸ் பகுதியில் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பாக, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் தொண்டர்களும் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் நான் பேசியபோது, வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இருக்காது என்று கூறினார்கள். 80,000 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வளவு பேர் எப்படி அங்கு திரண்டனர்? இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.