சென்னை: ‘பராசக்தி’ படத்தை டிஜிட்டல் வடிவில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், வேறு யாரும் பெயரை படத்தின் தலைப்பாக பயன்படுத்த வேண்டாம் என நேஷனல் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 1952-ம் ஆண்டு கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் கருணாநிதியின் வசனங்களுடன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அறிமுகமான திரைப்படம் பராசக்தி.
இந்தப் படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்கள் தாத்தா பெருமாள் முதலியார் தயாரித்துள்ளார். சில பகுதிகளின் விநியோக உரிமையை மட்டுமே ஏவிஎம் பெற்றிருந்தது. இப்படத்தில் சிவாஜியை ஹீரோவாக நடிக்க ஏவிஎம்மின் ஏவி.மெய்யப்ப செட்டியார் எதிர்ப்பு தெரிவித்தாலும், சிவாஜியை ஹீரோவாக நடிக்க வைக்க வலியுறுத்தியவர் பெருமாள் முதலியார். அவரை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளராக இருந்த சிவாஜி தனது கடைசி காலம் வரை ஒவ்வொரு பொங்கலுக்கும் வேலூர் வந்து பெருமாள் முதலியாரிடம் ஆசி பெறுவது வழக்கம்.

அப்படிப்பட்ட எங்கள் தாத்தாவின் பெருமைக்குரிய தயாரிப்பு, ‘பராசக்தி’. பொன்விழா, வைரவிழா கண்ட இந்தப் படம் நூற்றாண்டு கடந்தும் அதன் தாக்கம் குறையவில்லை, அந்த படத்தில் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களும், சிவாஜியின் உணர்வுபூர்வமான நடிப்பும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். விரைவில் வெள்ளி விழா (75-வது ஆண்டு) நடைபெற உள்ள நிலையில், ‘பராசக்தி’ படத்தை டிஜிட்டல் வடிவில் வெளியிட திட்டமிட்டு, தொடங்க உள்ளோம் என்பதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு (நேஷனல் பிக்சர்ஸ்) பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தருணத்தில், எங்களின் முழு உரிமையான ‘பராசக்தி’ படத்தின் பெயரை வேறு யாரும் தங்கள் படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் ரவிமோகன் வில்லனாக நடிக்கிறார். லீலா மற்றும் அதர்வா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயர் வைத்துள்ளனர்.