மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அவர் தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் மற்றும் உரையை தாக்கல் செய்வார். நாடாளுமன்ற விவகாரங்களை ஒளிபரப்பும் சன்சாத் தொலைக்காட்சியில் பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மத்திய பட்ஜெட் குறித்து, நிதித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
தனிநபர் வருமான வரி விலக்கின் உச்ச வரம்பு, புதிய வரி விகிதத்தில் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படலாம். கூடுதலாக, 2 புதிய வரி வகைகள் சேர்க்கப்படலாம். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்க வாய்ப்பு உள்ளது. மின்னணு உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியும் குறைக்கப்படலாம். தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படலாம். தற்போது சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதி உதவியை ரூ. 12,000 ஆக அதிகரிக்கப்படலாம். அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 5,000. இது ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்படலாம். மத்திய பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை அறிவிக்கப்படலாம். இதன்படி அருகில் உள்ள அரசு அலுவலகங்களில் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி பயிற்சி அளிக்கப்படும். இந்த திட்டத்தில், ஸ்டார்ட் அப்களை தொடங்க ஊக்கத்தொகை வழங்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். இளங்கலை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்கள் வழங்கப்படலாம்.
மருத்துவ உபகரணங்களுக்கான இறக்குமதி வரி கணிசமாக குறைக்கப்படலாம். நடுத்தர மக்களின் சொந்த வீடு என்ற கனவை ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகைகள் அறிவிக்கப்படலாம். தற்போது பெருநகரங்களில் 45 லட்சம் மதிப்புள்ள வீடுகளை வாங்குபவர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொகை 70 லட்சம் ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சிறு நகரங்களில் வீடுகளை வாங்குபவர்களுக்கு 50 லட்சம் மதிப்பில் வாங்குபவர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படலாம். தற்போது, வீட்டுக் கடனுக்கான வட்டியில் ஒரு நிதியாண்டில் 2 லட்சம் ரூபாய்க்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.5 லட்சம் ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் அடித்தள அலுவலகத்தில் கடந்த 7 நாட்களாக சுமார் 100 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்ஜெட் தகவல்கள் வெளியே கசிவதை தடுக்க, 100 பேரிடம் செல்போன்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் போதுதான் முழு விவரம் தெரியவரும். இவ்வாறு நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.