சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற உள்ள கள ஆய்வு பணிகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 13 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.
குவாரிகளில் லாபம், ஊழல், சுரண்டல் என்பதே திமுக அரசின் நோக்கம். மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்க மாட்டோம். மீறி திறந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். நாட்டில் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை பிரச்னை என பல பிரச்னைகள் உள்ளன.
பெரியாரை பற்றி சீமான் பேசுவது மக்களை திசை திருப்பும் செயல். கிழக்கு கடற்கரை சாலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக விவாதத்திற்கு அழைத்த பழனிசாமி, தொகுதிகளில் அதிமுகவின் பலம் மற்றும் பலவீனம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, “இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேர்த்தால்தான் கட்சி வளர்ச்சியடையும் என்று அறிவுறுத்தினார். அதேசமயம், அவர்களின் குற்றப் பின்னணியை விசாரித்த பின்னரே அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.