பீம்சிங் முதல் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், சமீபகாலமாக அட்லீ என பல தமிழ் இயக்குனர்கள் இந்தியில் படங்களை இயக்கியுள்ளனர். சமீபகாலமாக தமிழ் இயக்குனர்களுக்கு ஹிந்தி பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் ஏற்கனவே இந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அமீர்கான், அக்ஷய் குமார் நடித்த படங்களை இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார்.
தற்போது சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். தமிழில் வெற்றிப் படங்களை கொடுத்த அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கியிருந்தார். நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் அடுத்ததாக சல்மான் கான் நடிக்கும் பிரமாண்ட ஹிந்திப் படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தை இயக்குகிறார். இவர் அடுத்து அமீர்கான் நடிக்கும் சூப்பர் ஹீரோ படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் சில படங்களை இயக்கி முடிக்க வேண்டியுள்ளதால் அதன் பிறகு இயக்குவார் என்கிறார்கள். ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்போது இளையராஜாவின் ‘பயோபிக்’ படத்தை இயக்குகிறார். இதை முடித்த பிறகு இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இதனை டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதே நிறுவனம் ‘அமரன்’ இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஹிந்திப் படத்தையும் தயாரித்து வருகிறது. ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘ஷெர்ஷா’ படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன், அடுத்ததாக ஒரு ஹிந்தி படத்தையும் இயக்க உள்ளார். “தமிழ் இயக்குனர்கள் மட்டுமின்றி தென்னிந்திய இயக்குனர்களுக்கும் இந்தியில் கிராக்கி அதிகம். தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவின் ‘அனிமல்’ எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது.
மேலும் இந்தி படங்கள் ஆண்டுக்கு ஒருமுறை படமாக்கப்படுவது வழக்கம். தென்னிந்திய இயக்குனர்கள் தங்கள் படப்பிடிப்பை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடித்து பணத்தை மிச்சப்படுத்துகிறார்கள்” என்கிறார் ஒரு இயக்குனர். மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தற்போது ‘தேவா’ என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். சன்னி தியோல் நடிக்கும் ‘ஜாட்’ படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். ‘மஞ்சும்மாள் பாய்ஸ்’ இயக்குனர் சிதம்பரம் உட்பட மேலும் சில தென்னிந்திய இயக்குனர்கள் இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளனர்.