சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- ஏப்., 28-க்குள் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, ஜனநாயக உரிமைகளான சாலைகளில் ஊர்வலம், முக்கிய சாலைகள் முன்பு ஆர்ப்பாட்டம் மறுக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அரசு அலுவலகங்கள், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது தமிழகத்தில் மறுக்கப்பட்டுள்ளது.
இப்போது பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் இருக்கக் கூடாது என்பதும், அப்படி இருந்தால் கட்டணம் வசூலிப்பதும், அபராதம் விதிப்பதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இத்தகைய எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு, மறு ஆய்வு செய்து திருத்தப்பட வேண்டிய முடிவாகும்.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் ஜனநாயக முறையில் செயல்பட, மதுரை கிளை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜனநாயக நெறிமுறைகளை பாதுகாக்க வேண்டும் அல்லது தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றம் மற்றும் அரசியலமைப்பின் மூலம் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும், என்றார்.