பாலக்காடு: போலி மருந்து விளம்பரம் தொடர்பான வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேதா லிமிடெட் மீது பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேற்கண்ட நிறுவனம் மீது போலி விளம்பரங்கள், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் வர்த்தக முத்திரை மீறல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியுள்ளது. எனினும் நீதிமன்ற உத்தரவை மீண்டும் மீறினால் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி விளம்பர வழக்கில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேதா லிமிடெட் அளித்த மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எனவே, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
பாம்பே உயர்நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்திற்கு ஏற்கனவே நான்கு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பாபா ராம்தேவ் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்றும் நவீன மருத்துவம் பயனற்றது என்றும் இந்திய மருத்துவ சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ், பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது திவ்யா பார்மசி என்ற நிறுவனம் கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் நேற்று ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் வரும் 15-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கேரளாவைச் சேர்ந்த திவ்யா பார்மசி என்ற நிறுவனம், போலி மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறி, பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.