யுவராஜ் பிலிம்ஸ் பி.யுவராஜ் தயாரித்து, பிரதாப் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பேபி & பேபி’. டி. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நாயகியாக பிரக்யா நடிக்கிறார், மேலும் யோகி பாபு மற்றும் சத்யராஜ் இரண்டு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் சத்யராஜின் மனைவியாக அஜித் – விஜய் ஜோடியாக நடித்த கீர்த்தனா நடிக்கிறார்.
விறுவிறுப்பான நகைச்சுவை குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். படத்தின் இயக்குனர் பிரதாப் பேசுகையில், “எதிர்பாராத விதமாக ஒரு பெரிய குடும்பத்தில் நுழையும் குழந்தை பற்றிய நகைச்சுவை கலந்த படம் இது. கதையை எழுதி முடித்ததும் முதலில் யோகிபாபு சாரிடம் சென்று சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது.
படம் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு அவர்தான் காரணம். பிறகு சத்யராஜ் சாரிடம் சொன்னபோது அவரும் ஒப்புக்கொண்டார். ஹீரோ ஜெய் கடுமையாக உழைத்தார். ரம்ஜான் நோன்பு காலத்தில் மூன்று வேளையும் சாப்பிடாமல் நடித்தார். முதலில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று கீர்த்தனா மேடம் கூறினார். சத்யராஜ் சார் ஜோடி என்று சொன்னதும் உடனே ஓகே சொல்லிவிட்டார். இந்தக் குடும்பக் கதைக்கு இமான் சார் இசையமைக்க வேண்டும் என்று விரும்பினேன். கதையைக் கேட்டு உடனே ஒப்புக்கொண்டார்.
இவரது இசையில் உள்ள அனைத்து பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். எல்லோருக்கும் பிடிக்கும் படத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்,” என்றார். ‘பேபி & பேபி’ டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு இயக்குனரை தொடர்ந்து யோகி பாபு கூறியதாவது:- படத்தின் இயக்குனர் பிரதாப் எனது 17 வருட நண்பர். அவர் ஒரு இயக்குனர், நான் ஒரு நகைச்சுவை நடிகர். உண்மையாக உழைத்தால் நமக்கு வரவேண்டியது தானாக வந்து சேரும். இந்தப் படம் ஒரு நல்ல அனுபவம். நானும் சத்யராஜ் சாரும் எப்போதும் கவுண்டமணி சார் பற்றி பேசி சிரிப்போம்.
நான் ஜெய்யிடம் கேட்டேன், ‘நீ எப்படி இன்னும் இளமையாக இருக்கிறாய்?! அவர், ‘நான் தனிமையில் இருப்பதால் இளமையாக இருக்கிறேன். நீ அங்கிளா போகிறாய், சீக்கிரம் கல்யாணம் செய்துகொள்” என்று கேலி செய்தார். நடிகர் சத்யராஜ் கூறியதாவது:- நானும் ஜெய்யும் இன்னொரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறோம். நாங்கள் இணைந்து நடித்த ‘ராஜா ராணி’ படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகிறது. ‘பார்ட்டி’ படம் இன்னும் வெளியாகவில்லை, ‘மதகதராஜா’ மாதிரி வந்தால் நிச்சயம் ஹிட் அடிக்கும்.
இந்த படத்தில் அஜித் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தனா தான் எனக்கு ஜோடி. நாங்களும் இன்னும் இளமையாக இருக்கிறோம். அத்தனை நடிகர்களையும் வைத்து மிக அழகாகவும், விரைவாகவும் படத்தைத் திட்டமிட்டிருக்கிறார் பிரதாப். வாழ்த்துகள். நானும் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். இறுதியாக படத்தின் ஹீரோ ஜெய் கூறியதாவது: இயக்குனர் கதை சொல்ல வந்தபோது சத்யராஜ் சார், யோகி பாபு டார்லிங் எல்லாம் ஓகே என்று சொன்னதால் நானும் ஓகே சொல்லிவிட்டேன். படப்பிடிப்பில் பாட்டி வேடத்தில் நடிப்பது கடினமாகத் தெரியவில்லை. “படப்பிடிப்பின் போது சத்யராஜ் சார், யோகி பாபு வயிறு வலிக்கும் வரை சிரிக்க வைப்பார்கள், அது கஷ்டமா இருக்கும். ரத்தமும் வெட்டு குத்து இல்லாமல் மனதை வருடும், ரசிக்க வைக்கும் படமாக இந்தப் படம் இருக்கும். பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.